தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் (உரித்துப் பொடியாக நறுக்கியது) – 2 கப்
வரமிளகாய் – 10
கெட்டியாகக் கரைத்த புளி – 1/4 கப்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 1/4 கப்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – வாசனைக்கு
செய்முறை
வரமிளகாயை சிறு துண்டுகளாகக் கிள்ளி வைத்துக் கொள்ளவும். இருப்புச் சட்டியில் எண்ணெயை நன்கு காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு போட்டுத் தாளித்து, கறிவேப்பிலை போட்டுப் ‘படபட’வெனப் பொரிய விடவும். பிறகு, தீயை ‘ஸிம்’மில் வைத்து, வரமிளகாய் துண்டுகளைக் கொட்டிக் கிளறவும்.
மிளகாய் வறுபட்டு நல்ல வாசம் வரும் போது, வெங்காயத்தைக் கொட்டி நன்கு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், மிளகாய்தூளையும் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசலைச் சேர்த்து, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து வற்றி, தொக்கு போல வரும் போது இறக்கி விடவும்.
செட்டிநாட்டுக் கல்யாணப் பந்தியில் தவறாமல் இடம்பெறும் அயிட்டம் இது. சூடான இட்லியும் டாங்கரும் இருந்தால் போதும். வேறு எதுவுமே தேவையில்லை என்பீர்கள்!
குறிப்பு
டாங்கர் கெட்டியாக இல்லாமல் தண்ணியாக இருந்தால், அரை டீஸ்பூன் பொட்டுக்கடலை மாவைக் கரைத்துச் சேர்த்துக் கொதிக்க விடுங்கள். விருப்பப்பட்டால், 10 பல் பூண்டை உரித்து, மெல்லிசாக வட்டவட்டமாக நறுக்கி, வெங்காயத்துடன் சேர்த்து வதக்கலாம். சுவை கூடும்.
டாங்கர்
Previous post: சும்மா குழம்பு (அல்லது) தண்ணீக் குழம்பு
Next post: ரோசாப்பூ துவையல்